×

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை களைகட்டியது

நெல்லை: மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று பக்ரீத் ஆடுகள் விற்பனை களைகட்டியது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மக்கள் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்றனர். தென்மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தை வாரம்தோறும் செவ்வாய்கிழமை நடந்து வருகிறது. இச்சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள வியாபாரிகளும் ஆடுகள் விற்பனைக்கு வந்து செல்வது வழக்கம். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 29ம் கொண்டாடப்படுகிறது. ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையில் இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை இஸ்லாமியர்கள் நினைவு கூறுவர்.

அந்த நாளில் ஏழைகளுக்கு இறைச்சி சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி, இஸ்லாமியர்கள் இறைச்சியை தானம் செய்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடு, மாடுகளை பலி கொடுத்து, 3 பகுதிகளாக பிரிப்பர். ஒன்றை தம் குடும்பத்திற்கும், இரண்டாம் பகுதியை உறவினர்களுக்கும், 3ம் பகுதியை ஏழைகளுக்கும் தானம் கொடுப்பர். இது இஸ்லாமியர்களின் வழக்கப்படி குர்பானி எனப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுப்பதற்கு ஆடுகள் வாங்க இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமானோர் குவிந்தனர். சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.2 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை மதிப்புள்ள ஆடுகள் சந்தையில் விற்கப்பட்டன. செம்மறி ஆடுகளை வியாபாரிகளிடம் பொதுமக்கள் போட்டி போட்டு விலை பேசி வாங்கி சென்றனர்.

எடைக்கு ஏற்ப ஆடுகளுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சில ஆடுகள் ரூ.20 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என கூடுதல் விலைக்கும் விற்கப்பட்டது. சந்தைக்கு வெளிப்பகுதியில் உள்ள டக்கரம்மாள்புரம் ரோட்டில் இருபுறமும் கோழிகள், கருவாடு விற்பனையும் களைகட்டியது. சந்தை வியாபாரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘மேலப்பாளையம் சந்தையில் எப்போதுமே உச்சபட்ச வியாபாரம் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடப்பது வழக்கம். அதிலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இறைச்சியை தானம் செய்யும் பழக்கம் உள்ளதால், நடுத்தர, வசதி படைத்த குடும்பத்தினர் ஆடுகளை தேவைக்கேற்ப வாங்கி செல்வர். கிடாக்களுக்கு இன்று நல்ல மவுசு இருந்தது. மற்ற வாரங்களை ஒப்பிடுகையில் இவ்வாரம் நல்ல விற்பனை இருந்தது’’ என்றனர்.

The post மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Melapalayam Livestock Market ,festival of Bakrit ,Nellai ,Melapalayam ,Pakreet ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு