×

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: முதலமைச்சரின் உத்தரவின்படி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (20.06.2023) தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மண்டலம்13, வார்டு 168, செட்டித்தோட்டம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; 1950 க்குப் பிறகு 73 ஆண்டுகளில் ஜுன் மாதத்தில் பெய்த பெரிய அளிவிலான மழை என்கின்ற வகையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நேற்றைக்கு முன்தினம் சென்னையில் பெய்த மழை என்பது ஒரே நாளில் 16 சென்டிமீட்டர் அளவிற்கு பெய்திருக்கிறது.

இதற்கு முன்னாள் 1996 ஆம் ஆண்டு 28 Cm அளவிற்கு மழை பெய்திருக்கிறது. 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பாதிப்பும் 27 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவிலான மழை பாதிப்பு என்கின்ற வகையில் நேற்றைக்கு முன்தினம் மழை பெய்திருக்கிறது. இந்த பாதிப்புகளை பொறுத்தவரை முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மழை நீர் வடிகால்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர்வள ஆதாரத் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 கி.மீ நீளத்திற்கான புதிய மழை நீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டிருக்கிறது. அதே போல் கொசஸ்தலை ஆறு, கோவளம் ஆறு வடிநில பகுதிகளில் சுமார் 1120 கி.மீ நீளத்திற்கு 4900 கோடி ரூபாய் செலவில் பெரிய வடிநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் 50% பணிகள் தற்போது முடிவுற்றிருக்கிறது. பழைமை வாய்ந்த சென்னை மாநகராட்சி வராலாற்றில், முதன்முறையாக மிகப்பெரிய அளவில் கட்டப்படும் கால்வாய்களின் நீளமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் மழை பாதிப்புகள் ஏற்பட்டாலும், பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்புகள் இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

சில இடங்களில் மரங்கள் முறிந்தாலும், பெருநகர மாநகராட்சியின் ஊழியர்கள் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி வருகின்றனர். மழை காலத்திற்கு பின்பு ஏற்படும் பாதிப்புகளை பொருத்தவரை, குறிப்பாக குடிசைப் பகுதிகள், குடியிருப்புகள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்த மாதம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பல் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணியினை பார்வையிட்டோம்.

தொடர்ந்து தஞ்சாவூரில் டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக, ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்ட PET CT Scan கருவிகளை மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களுடன் திறந்து வைத்தும், பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் புற்று நோய் மருத்துவ கட்டிடப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். இன்று திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்,

சென்னைக்கு சென்று, மழை பாதிப்பு பணிகளை கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். அதன்படி நேற்று இரவு சென்னைக்கு திரும்பியவுடன் மழை பாதிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இன்று சைதாப்பேட்டை, ஜோதிநகர், நெருப்புமேடு ஆகிய பகுதிகளை ஒட்டிய அடையாறின் ஓரம் நீரின் அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுப்பிரமணிய சாலை, திருவள்ளுவர் சாலைகளில் மழை நீர் வடிகால்கள் முழுமையாக கட்டப்பட்டுள்ளதால் பாதிப்புகள் இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து விருகம்பாக்கத்தில் இராஜமன்னார் சாலை, இராமசாமி சாலை போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வேளச்சேரியில் உள்ள விஜயநகர பகுதிகள், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம், ராம் நகர் போன்ற பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்கள். இந்நிகழ்வின்போது மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் (பொது) ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் மண்டல அலுவலர் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai Subramanian ,Chennai ,Chief Minister ,Ma. Supramanyan ,Saithapet Assembly Constituency ,Zone ,Ward ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி