×

உழவன் கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன்பெறவேண்டும்: வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்

திருவள்ளூர்: தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட உழவன் கைபேசி செயலியை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் பொருட்டு வேளாண்மை உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைப்பேசி உள்ளது.

அதனால் வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த உழவன் செயலி. பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்றவை பல்வேறு இடங்களுக்கு சென்று விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கைபேசி மூலமாக விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவதே முக்கிய நோக்கமாகும். கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியில் தற்போது 22 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்செயலி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.

மேலும் அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் இந்த செயலியில் இடம் பெற்றிருக்கும். தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள இரசாயன உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள் மற்றும், வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்குகளில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை தொகை, வாடகை முன் பதிவு பற்றிய விவரங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை இடம் பெற்றிருக்கும். மேலும் மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் தங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் உதவி வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலரின் பெயர், கைபேசி எண் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

விவசாயிகள் தாமாகவே உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை முன்பதிவு செய்து கொள்ள அலுவலர்களை சார்ந்து இல்லாமல் தாங்களாகவே இச்செயலியின் மூலம் தங்களுக்கு தேவையான திட்டங்களில் பயன்பெற முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

The post உழவன் கைபேசி செயலி மூலம் விவசாயிகள் பயன்பெறவேண்டும்: வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Deputy Director of ,Tamil Nadu government ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!