![]()
குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கொட்டும் மழையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதி விபத்துள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூரில் இருந்து குமணன்சாவடி செல்லும் பிரதான சாலையில் சிவன்தாங்கல் அருகே நேற்று சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனைக்கண்டதும் அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக களத்தில் இறங்கி காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்தது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து நைசாக தங்களது காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவர்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது தடுப்பு சுவரில் மோதி விபத்து நடந்ததா? அல்லது மழை காரணமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குன்றத்தூர் அருகே தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் விபத்து appeared first on Dinakaran.
