×

என்.ஐ.ஏ அதிகாரிகளால் மதுரை வக்கீல் மிரட்டப்பட்டாரா? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

புதுடெல்லி: வழக்கு விவகாரத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் மிரட்டப்பட்டாரா என்பது தெரிய வேண்டும் என உச்ச நீதிமன்ற நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தனக்கு எதிராக என்.ஐ.ஏ தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் முகமது அப்பாஸ் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏவின் விளக்கத்தை கேட்காமல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் முகமது அப்பாஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,‘‘மதுரை வழக்கறிஞர் முகமது அப்பாஸ் என்.ஐ.ஏ அதிகாரிகளால் மிரட்டப்பட்டாரா என்பதை உச்ச நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. ஏனென்றால் வழக்கறிஞராக இருக்கும் ஒரு நபர் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தனது பணியினை தொடர கட்டாயம் அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post என்.ஐ.ஏ அதிகாரிகளால் மதுரை வக்கீல் மிரட்டப்பட்டாரா? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,NIA ,Supreme Court ,New Delhi ,Mohammad Abbas ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை