×

ஏற்கனவே 6 முறை சென்றிருந்தாலும் இதுவே முதல் அரசு முறை; பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்: 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளின் அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: பிரதமர் மோடி முதன் முறையாக அரசு முறை பயணமாக நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவர் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறை பயணமாக நாளை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின்பேரில் நாளை மறுநாள் (ஜூன் 21) முதல் 23ம் தேதி வரை, அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம், இதுவரை இல்லாத வகையில் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் உட்பட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு முதல் தனிப்பட்ட முறையில் இதுவரை ஆறு முறை அமெரிக்கா சென்றுள்ளார். அப்போதைய அதிபர்கள் பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், (தற்போதைய) ஜோ பிடன் ஆகிய மூன்று அதிபர்களை சந்தித்துள்ளார். நாளைய பயணம் அதிகாரபூர்வ அரசு முறை பயணம் என்பதால், அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நாளை நியூயார்க் நகரை அடைவார். ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் அவரை வரவேற்கின்றனர். ெதாடர்ந்து நாளை மறுநாள் (ஜூன் 21) நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். அங்கு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதன்பின் வாஷிங்டன் புறப்பட்டு செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பிடன், அவரது மனைவி ஜில் பிடன் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வரும் 22ம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். இந்த நிகழ்வில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். சம்பிரதாய வரவேற்புக்குப் பிறகு, பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அன்றைய தினம் பிற்பகல், அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய மூன்றாவது உலகத் தலைவர் பிரதமர் மோடி என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தின் போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். வரும் 23ம் தேதி பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மதிய விருந்து அளிக்கிறார். அன்று மாலை ரொனால்ட் ரீகன் மையத்தில் நடைபெறும் மெகா நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 24, 25ம் தேதிகளில் பிரதமர் மோடி எகிப்து சென்று அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியை சந்திக்கிறார். மோடியின் முதல் எகிப்து பயணம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான ராணுவம், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஏற்கனவே 6 முறை சென்றிருந்தாலும் இதுவே முதல் அரசு முறை; பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்: 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளின் அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,US ,New Delhi ,Modi ,America ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...