ஏற்காடு: சேலத்தில் நகை கடை பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி மற்றும் ₹50 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகர் குரங்குச்சாவடி அவ்வைநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (23). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன், ஏற்காட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் போதை பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று காலை போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த மணிகண்டன், மீண்டும் தான் இங்கு சேர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் விக்டர், இது குறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில், வந்த போலீசார் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள நகை கடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு டூவீலரில் ஏற்காடு வந்தது தெரிய வந்தது. தொடர் சோதனையில், டூவீலரில் 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், ₹50 ஆயிரம் இருந்தது. இதை போலீசார் மீட்டு மணிகண்டனை கைது செய்தனர். பின்னர், வெள்ளிப்பொருட்களை திருடிய மணிகண்டனை கைது செய்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கைதான மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post 7 கிலோ வெள்ளி திருடியவர் கைது appeared first on Dinakaran.
