×

பேரையூர் அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்: நாட்டாமை உள்ளிட்டோர் மீது வழக்கு

 

பேரையூர், ஜூன் 19: பேரையூர் அருகே திருவிழாவில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்தியதாக, கிராம நாட்டாமை உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேரையூர் அருகேயுள்ளது எஸ்.கீழப்பட்டி. இந்த ஊரில் செல்லாயி அம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது. இத்திருவிழா நிகழ்ச்சியாக ஆடலும், பாடலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பான குறிப்பாணையை கிராமத்தில் விழா கமிட்டியாளர்களிடம் கொடுக்க பேரையூர் போலீசார் சமீபத்தில் வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.கீழப்பட்டியைச் சேர்ந்த ஊர் நாட்டாமை சுந்தரமூர்த்தி, குட்டித்தம்பி (எ) கூத்தன், வைரக்கொடி, ஹரி, வனராஜா, ராமராஜ், தங்கப்பாண்டி ஆகிய 7 பேர் போலீசாருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கணேஷ்குமார் அவர்களை தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஏட்டுவின் சட்டையை கிழித்ததுடன், அவரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஏட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் நாட்டாமை சுந்தரமூர்த்தி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பேரையூர் அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்: நாட்டாமை உள்ளிட்டோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Natama ,Ettu ,Natami ,Police Ettu ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர்...