×

குன்னூர் வைகை ஆற்றில் மணல் திருட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

 

ஆண்டிபட்டி, ஜூன் 19: தேனி மாவட்டம், குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டு உள்ள 15க்கும் மேற்பட்ட உறை கிணறுகளில் இருந்து தேனி நகர் பகுதி, கலெக்டர் அலுவலகம், ஆண்டிபட்டி ஊராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையில் குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அடியோடு சரிந்துள்ளது. இதன்காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் தண்ணீர் சுரப்பதும் குறைந்துவிட்டது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் குன்னூர் வைகை ஆற்றில் நள்ளிரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களில் மணல் திருடப்பட்டு வருகிறது. இதேபோல வைகை ஆற்றில் மணலை அள்ளி அதே பகுதியில் உள்ள முனியாண்டி கோயில் முன்பாக குவித்து வைத்து, அந்த மணலை லாரிகள் மூலம் கடத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இந்த மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், நிலத்தடிநீரும் அதலபாதாளத்திற்கு சென்றுவிடும் அபாயம் உள்ளதாக கூறும் விவசாயிகள், மணல் திருட்டை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் வைகை ஆற்றில் மணல் திருட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigai River, Coonoor ,Andipatti ,Vaigai river, Coonoor, Theni district ,Coonoor Vaigai river ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார்