×

கலைஞர் சரித்திரம்

தே ரோடும் திருவாரூரிலே கலைஞர் கோட்டம் நாளை திறக்கப்பட உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இரண்டடியில் உலகையே அளந்த திருவள்ளுவருக்கு சென்னையில் காணப்படும் வள்ளுவர் கோட்டம் போல, திருவாரூரில் கலைஞர் கோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் இக்கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோட்டத்தில் கலைஞரின் திருவுருவ சிலை, அவரது பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை முத்துவேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கோட்டம் திறக்கப்படும் இந்நேரத்தில் கலைஞரின் போர் குணத்தை, தியாக வரலாற்றை தமிழ்நாடு நினைவு கூர வேண்டியதும் கட்டாயமாகும். 14 வயதிலே இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியவர் கலைஞர். இந்தியாவில் ஒரு மாநில கட்சி முதன்முறையாக ஆட்சியை பிடிக்க அண்ணாவுக்கு தளபதியாய் துணை நின்றவர் கலைஞர். மனிதர்களை மனிதரே இழுக்கும் கை ரிக்‌ஷாக்களை ஒழித்ததோடு, குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள், பார்வையற்றோருக்கு கண்ணொளி திட்டம், நில உச்சவரம்பு சட்டம், பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார்.

இந்தியாவில் மாநில சுயாட்சிக்கு முதல் குரல் எப்போதுமே தமிழ்நாட்டில் இருந்துதான் எழும். அதற்கு திமுகவும், கலைஞருமே காரணமாகும். சுதந்திர தின விழாவில் மாநில முதல்வர்கள் தலைமை செயலகத்தில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர். சாதி பிரிவினையை ஒழிக்க சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என கலைஞரின் பெயர் சொல்லும் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் அறிஞர்களுக்கு, அதிலும் வான் புகழும் வள்ளுவரை உலக அரங்கில் மிளிரச் செய்த பெருமையும் கலைஞரையே சாரும்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்திட திட்டமிட்டு, அதற்கான தேர், வள்ளுவர் சிலை, குறள் மணிமண்டபம், பிரமாண்ட கலையரங்கம் என ஒவ்வொன்றையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என சிற்பிக்கு அறிவுறுத்தி செதுக்கியவர் கலைஞர். காலத்தின் கொடூரம், மிசாவின் இரும்பு கரங்களில் தமிழ்நாடு சிக்கியபோது, அப்போதைய குடியரசு தலைவர் பக்ரூதீன் அலி வள்ளுவர் கோட்டத்தை திறந்தபோது, கலைஞருக்கு முறையான அழைப்பு கூட இல்லை. அந்த நாளில் ‘கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது’ என உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று பெட்டகம்.

அந்தளவுக்கு உணர்ச்சி பிழம்புகள் அதில் ஊடுருவியிருந்தன. திறப்பு விழாவிற்கு அழைக்காவிட்டால் என்ன, காலச்சக்கரம் சுழன்றபோது, 1989ல் அவர் மீண்டும் ஆட்சியை பிடித்தபோது, பதவியேற்பு விழாவை அதே வள்ளுவர் கோட்டத்தில் நடத்தி, தன் சபதத்தை நிறைவேற்றினார் கலைஞர். ‘சரித்திரத்தில் நமக்கு கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல’ என கலைஞரின் உறுதிமிக்க வார்த்தைகளே இன்றும், திமுகவை உரமேற்றி கொண்டிருக்கிறது. பகை வெல்லும் திமுக பட்டாளத்திற்கு கலைஞர் கோட்டம் ஒரு கலங்கரை விளக்கம் என்றே கூறலாம்.

The post கலைஞர் சரித்திரம் appeared first on Dinakaran.

Tags : Kotham ,The Road ,Tiruvarur ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள்...