×

கூடலூர் அருகே வெட்டுக்காடு பகுதியில் காட்டு யானைகளால் வாைழ மரங்கள், ேசாளம் சேதம்: தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விட கோரிக்கை

கூடலூர்: கூடலூர் அருகே வெட்டுக்காடு பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் விவசாய நிலத்திற்குள் புகுந்ததில் ஏராளமான வாழை மரங்கள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, கடமான்குளம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிக அளவில் தென்னை, வாழை, சோளம், கம்பு மற்றும் பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த விவசாய நிலத்தினை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், அவ்வப்போது யானை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நிலத்தை சேதப்படுத்துவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை கூட்டம் வேளாண்காடு பகுதியைச் சேசார்ந்த ராஜேந்திரன், ரமேஷ், சுதாகர், வைஜயந்தி ஆகிய விவசாயிகளுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சோளக்காட்டுக்குள் புகுந்துள்ளது. பின் வாழைத்தோட்டங்களில் இருந்த ஏராளமான செவ்வாழை மற்றும் நாளிப்பூவன் வாழை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. அதேபோல் அருகே இருந்த சோளத் தோட்டத்திற்குள் புகுந்து சோளத்தட்டைகளை நாசம் செய்ததோடு தண்ணீருக்காக பதிக்கப்பட்டிருந்த குழாய்களையும் மிதித்து சேதப்படுத்தி பின்னர் அதிகாலை மீண்டும் வனத்திற்குள் சென்றுள்ளது. நேற்று தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கும், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை யினர் யானைகள் சேதம் செய்த பகுதி முழுவதையும் பார்வையிட்டு சென்றனர். பாதிப்படைந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.’’ என்றனர்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாயசங்க தலைவர் எஸ்ஆர் தேவர் கூறுகையில், ‘‘வன விலங்குகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வெட்டுக்காடு விவசாயிகளின் கோரிக்கையை கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாரிகளும் அதற்குண்டான பணிகள் செய்வதாக உறுதியளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவம் வேதனை அளிப்பதோடு, வனத்துறையின் அலட்சியத்தை எடுத்துரைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. வெட்டுக்காடு பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளில் 90 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை விவசாயிகள். வனவிலங்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று, அதே நேரத்தில் வனப்பகுதிகளுக்கு ஒட்டி இருக்கின்ற விவசாய பூமிகளும் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தேனி மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

விலங்குகளிடமிருந்து காப்பது சவால் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை விவசாய நிலம், குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கூடலூர் அருகே வெட்டுக்காடு பகுதியில் காட்டு யானைகளால் வாைழ மரங்கள், ேசாளம் சேதம்: தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuttukada ,Kuddalore ,Lesalam ,Cuddalore ,Muttakuddalore ,Kudalore ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே காணாமல்போன பழங்குடியின...