×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹2 லட்சம் மோசடி

திருபுவனை, ஜூன் 18: திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (44). இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரிடம் கலித்தீர்த்தாள்குப்பம் பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், வடிவேல் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக கடந்த மார்ச் 2018ம் ஆண்டு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையிலும் வேலை வாங்கித் தரவில்லை என தெரிகிறது. பலமுறை அவரிடம் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அல்லது தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் தரவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதகடிப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் ரமேஷ் நின்று கொண்டிருந்தார். இதனை அறிந்த வடிவேல் மற்றும் அவருடைய நண்பர் அருணாச்சலத்துடன் சென்று, தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ், வடிவேலுவை தரக்குறைவாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த வடிவேல் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் எஸ்ஐ ராஜசேகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் ரமேஷ் மீது கடந்த 6 மாதத்திற்கு முன் முதியோர் மற்றும் விதவை, ஊனமுற்றோர் பென்ஷன் பெறுவதற்கு பல பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு, தாசில்தார் விஏஓ, ஆர்ஐ ஆகியோர்களின் போலி கையெழுத்து, போலி முத்திரை போட்டு மோசடி செய்ததாக இவர் மீது திருபுவனை தொகுதி எம்எல்ஏ அங்காளன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹2 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Tiruphuvanai ,Madakadippatpaliyam ,Thirupuvanai ,
× RELATED 50 பேர் மீது போலியாக கடன் பெற்று ₹35 லட்சம் மோசடி