இம்பால்: மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் பொதுமக்கள், பாஜ தலைவர்களின் வீடுகளை தாக்கி, தொடர்ந்து தீ வைக்க முயன்றதால் பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்டீஸ் பிரிவினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் வன்முறை தொடர்கிறது. கடந்த புதன்கிழமை 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இம்பாலில் கடந்த வியாழன் இரவு ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று தீ வைத்து எரிக்க முயன்றது. பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தப்பியது.
ஆனாலும், பாஜ மீது ஆத்திரமடைந்துள்ள மணிப்பூர் மக்கள் தொடர்ந்து அக்கட்சி தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி தீ வைக்க முயன்று வருகின்றனர். பாஜ எம்எல்ஏ பிஸ்வஜீத், பாஜ மகளிரணி தலைவி சாரதா தேவி ஆகியோரின் வீடுகள் மற்றும் பாஜ அலுவலகம் ஆகியவை மீது கல்வீசி தாக்கிய கும்பல் தீ வைத்து எரிக்க முயன்றது. மணிப்பூர் அதிரடிப் படையினரும், ராணுவம் மற்றும் போலீசாரும் இந்த சம்பவங்களை தடுத்து, கண்ணீர் புகை குண்டு வீசி கும்பலை விரட்டினர். கவாட்கா, கங்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்படுவதால், மணிப்பூரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
* பிரதமர் மோடி தலையிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வலியுறுத்தி உள்ளன. டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இணைந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் மணிப்பூரில் 3 முறை முதல்வராக இருந்த இபோபி சிங், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இகம்யூனிஸ்ட், திரிணாமுல், ஆம்ஆத்மி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
The post மணிப்பூரில் வன்முறை தீவிரம் பாஜ தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல்: தொடர்ந்து தீ வைக்க முயற்சி appeared first on Dinakaran.