×

அமெரிக்க பயணத்தில் மோடி-பைடன் சந்திப்பில் பேச உள்ள 5 விஷயங்கள்: இந்திய தூதர் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் இடையேயான சந்திப்பில் 5 முக்கியமான விஷயங்கள் பேசப்பட இருப்பதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து கூறி உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுதினம் நியூயார்க் சொல்கிறார். அதைத் தொடர்ந்து வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடி வரும் 22ம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தரும் அரசு விருந்தில் பங்கேற்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்த பயணம் குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து வாஷிங்டனில் அளித்த பேட்டியில், ‘‘மோடி பைடன் பேச்சுவார்த்தையில் சுகாதாரம், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய விஷயங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம் வெறும் வணிகம் சார்ந்தது மட்டுமல்ல, தேச பாதுகாப்பும் அதில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய முக்கியமான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள ஒத்துழைப்பும், நம்பிக்கையும் அவசியம். அத்தகைய பரஸ்பர நம்பிக்கை இந்தியா, அமெரிக்கா இடையே இருப்பது நிரூபணமாகும். மலிவு விலை மருத்துவம், மலிவு மருந்துகள், மலிவு தடுப்பூசிகள் போன்றவையும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடிக்கும். அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். எனவே கல்வியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணுவதற்கு இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர். பிரதமர் மோடியின் இந்த பயணம் இரு தரப்பு உறவில் மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

* நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசா குழுவில் இணைய அழைப்பு
நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி ஆய்வுக்கான அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் குழுவில் இந்தியா இணைய வேண்டுமென நாசா விருப்பம் தெரிவித்துள்ளது. நாசாவின் தொழில்நுட்பம், கொள்கை மற்றும் உத்திக்கான இணை நிர்வாகி பவ்யா லால் அளித்த பேட்டியில், ‘‘கடந்த மே நிலவரப்படி, ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் 25 நாடுகள் இணைந்துள்ளன. 26வது நாடாக இந்தியாவும் இணையும் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவை உலகளாவிய சக்தியாக நாசா பார்க்கிறது. விண்வெளிக்கு சுதந்திரமான அணுகலைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏவுகணை தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கொண்டுள்ளது. நிலா, செவ்வாய் கிரகத்திற்கு சென்றுள்ளது. எனவே ஆர்ட்டெமிஸ் குழுவில் இந்தியாவும் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். எதிர்கால சந்ததியினருக்கு விண்வெளி நிலையானதாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். அதற்கு ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றாக ஆராய்வதற்கான வாய்ப்பைப் பெறுவதே நன்மை தரும். இந்தியாவும் அமெரிக்காவும் நிலவில் பல விஷயங்களை ஒன்றாகச் செய்ய வேண்டும்’’ என்றார்.

* யோகா தின விழாவில் 180 நாட்டினர் பங்கேற்பு
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வரும் 21ம் தேதி நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்று காலை 8 மணி முதல் 9 மணி வரை யோகாசனம் செய்ய உள்ளார். இந்நிகழ்ச்சியில் 180 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post அமெரிக்க பயணத்தில் மோடி-பைடன் சந்திப்பில் பேச உள்ள 5 விஷயங்கள்: இந்திய தூதர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,US ,Ambassador ,Washington ,President Biden ,-Biden ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...