×

வழக்குகளை நடத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் காவல் துறை உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதை தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், விழுப்புரம் குற்றவியல் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன், திருவாரூர் குற்றவியல் வழக்கறிஞர் டி.மணிவண்ணன், சென்னை உயர் நீதிமன்ற குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர்கள் பாபு முத்துமீரான், முனியப்பராஜ், தாமோதரன், கஸ்தூரி ரவிச்சந்திரன், ராஜ் திலக், சுகேந்திரன், ராஜகுமார் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

இதில், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பேசியதாவது: வழக்குகளை நடத்தும்போது காவல்துறையினர் எவரேனும் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது அந்த மாநகரத்தின் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு உடனே தீர்வு காண அந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதல் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அசன் முகமது ஜின்னா தலைமையில் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் சந்தித்தனர்.

The post வழக்குகளை நடத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் காவல் துறை உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Asan Mohammad Jinnah ,Chief Criminal Prosecutor ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...