×

சந்தேகம் இயல்பானதே…

அயோத்தியில் ராமர்கோயில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, உயர்சாதியினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு என்று சர்ச்சைகளில் மட்டுமே சரித்திரம் படைக்கும் பாஜ அரசு, கையில் எடுத்துள்ள புதிய அஸ்திரம் பொதுசிவில் சட்டம். இந்த பொதுசிவில் சட்டம் என்பது, இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து முக்கிய பிரச்னைகளின் போது மக்களை திசைதிருப்பும் அம்சங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. 1947 மார்ச் 28ம்தேதி, அடிப்படை உரிமைகள் குறித்து ஆராய்வதற்கான துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஆர்.மசானி, திடீரென பொதுசிவில் சட்டம் பற்றிய முன்மொழிவை கொண்டு வந்தார். மற்ற உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். இதனால் மசானியின் கோரிக்கை கைவிடப்பட்டது. 1947 மார்ச் 30ம் தேதி அரசமைப்பு சட்டத்தில் மீண்டும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த சட்டத்தில் 36 முதல் 51 வரையிலான பிரிவுகளை அரசமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பொதுசிவில் சட்டத்தில் 14வயது வரை அனைவருக்கும் இலவச கல்வி, ஆண்-பெண் இருபாலருக்கும் சமமான வேலைவாய்ப்பு, ஊதியம், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துதல் என்று பொதுவான குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏராளம் உள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், பாலின சமத்துவம் அதிகரிக்கும். சாதி, மதத்தின் பெயரால் தற்போது நடக்கும் பாகுபாடுகள் குறையும்.

தற்போது நடைமுறையில் உள்ள ஆயிரக்கணக்கான சட்டங்கள் வெகுவாக குறைக்கப்படும். இதனால் நீதித்துறை விசாரணைகள் எளிமையாகும் என்று சட்டத்தில் உள்ள சாதகங்களை முன்வைத்து ஆதரவு குரல் எழுப்புவோரும் கணிசமாக உள்ளனர். இது ஒருபுறமிருக்க, பாஜ நடத்தும் ஒன்றிய அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு முனைப்புகளும், மதம்சார்ந்தே இருக்கும் என்பதை தனியாக கோடிட்டு காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 9ஆண்டுகளாக அவர்கள் அறிவித்த பல்வேறு திட்டங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பொதுசிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது பாஜ என்கின்றனர் அனுபவம் வாய்ந்த அரசியல் நோக்கர்கள்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. இங்கே இந்துக்களுக்கான திருமணச்சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், சீக்கியர்களுக்கான சட்டம், பழங்குடி மக்களுக்கான சட்டம் என்று பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டங்கள் அனைத்தும் அவர்களின் இனம், மதத்தின் மீதான நம்பிக்கை சார்ந்தே உள்ளது. ஆனால், அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் சகோதரத்துவம் இங்கே ஓங்கி நிற்கிறது. இப்படிப்பட்ட நிலையில், ஒரே நாடு-ஒரே கார்டு என்று கூறிய பாஜ, தற்போது ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே நாடு-ஒரே மதம் என்று முரண்பாடான கோட்பாடுகளையும் முன்வைத்து வருகிறது. இந்த வகையில் அனைவருக்கும் பொதுவானது என்று கூறி, ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்த துடிக்கும் பொதுசிவில் சட்டமும், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து விடும் என்ற சந்தேகம், மக்கள் மனதில் எழுவது இயல்பானதே….

The post சந்தேகம் இயல்பானதே… appeared first on Dinakaran.

Tags : Ram ,Ayodhya ,Kashmir ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்