×

நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டம்: தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடி பரிசீலனை?

டெல்லி: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ள கட்சிகள், கூட்டணி குறித்த பேச்சுகளையும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை தமிழ்நாட்டில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாரணாசி மற்றும், வதோதரா தொகுதிகளில் போட்டியிட்ட அவர், கடந்த முறை வாரணாசியில் போட்டியிட்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வட மாநிலங்களில் ஒரு தொகுதி, தென் மாநிலங்களில் ஒரு தொகுதி என்று இரண்டு தொகுதிகளில் நிற்க பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். தென் மாநிலங்களில் அவரின் தேர்வு தமிழ்நாடு என்று கூறிய அந்த வட்டாரங்கள் ராமநாதபுரம் அல்லது கன்னியாகுமரி தொகுதியில் பிரதமர் போட்டியிடுவார் என்று கூறின.

தென் இந்தியாவில் பாஜகவுக்கு போதிய அளவில் செல்வாக்கு இல்லை என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் தமிழ்நாடு அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாரணாசியை போலவே ராமேஸ்வரமும் இந்துக்களின் புனித தளம் என்பதால் ராமநாதபுரத்தில் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளதாலும், கன்னியாகுமரி தொகுதி அக்கட்சி ஏற்கனவே வென்றதாலும் அங்கும் மோடி களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் முனை என்பதால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாஜகவுக்கு செல்வாக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் குமரியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் போட்டியிடுவதை மனதில் வைத்தே புதிய மாநாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழர் பிரதமராக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார். வரும் காலங்களில் தமிழ்நாட்டை மையப்படுத்தி இனி நிறைய நிகழ்வுகள் நடக்கும் என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இதன் காரணமாகவே நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டம்: தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடி பரிசீலனை? appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...