×

தடைகாலம் முடிந்து தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: எதிர்பார்த்த மீன்பாடு இல்லாததால் ஏமாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 60 நாட்கள் தடைகாலம் முடிந்து நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. ஆனால் எதிர்பார்த்த அளவு மீன்பாடு இல்லாததால் மீனவர்கள் உற்சாகமிழந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் ஆண்டுதோறும் இந்த 2 மாத தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 540 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தடைக்காலம் முடிவடைந்து நேற்று (15ம் தேதி) அதிகாலையில் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி இருந்தனர். ஆனால் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், 18ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமென நேற்றுமுன்தினம் மாலை மீன் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்ட மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மீன் துறையின் தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நேற்று (16ம் தேதி) அதிகாலை முதலே தூத்துக்குடியில் 265 விசைப்படகுகளும், மாவட்டத்தில் வேம்பார், தருவைக்குளம், திருச்செந்தூர், பெரியதாழை உள்ளிட்ட இடங்களில் கடற்கரை பகுதிகளிலிருந்து சுமார் 100 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

நேற்று இரவு 9 மணியளவில் விசைப்படகுகள் மீன்பிடித்து கரை திரும்பின. இதில் 60 நாட்கள் தடைகாலத்திற்கு பின் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பாத்திருத்தனர். ஆனால் எதிர்பார்த்தை விடவும் குறைந்த அளவே மீன்கள் பாடு இருந்ததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் விசைப்படகு மீன்கள் வரத்து அதிகரிக்கும் என்பதால் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தடைகாலம் முடிந்து தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: எதிர்பார்த்த மீன்பாடு இல்லாததால் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thutukudi ,Thoothukudi ,Toothukudi ,Thuthuscule Ventures ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...