×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு; மாம்பாக்கம் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்: போலீசார் சமரசம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 1200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுபோல் கருமாங்கழனி, கண்டிகை ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதே பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளி அருகில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை நேரங்களில் அதிக திறன் கொண்ட வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுகிறது. இதனால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம், மாம்பாக்கம் 2 கிராம எல்லையை ஒட்டி தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆழத்திற்கு வெடிவைத்து தகர்த்தப்பட்டு பாறைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குவாரியை ஒட்டி 2000 வீடுகளும், தனியார் பள்ளியும் உள்ளன. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் 4 முறை அதிக திறன் கொண்ட வெடி வைக்கப்பட்டு பாறைகள் தகர்க்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். தூசு படர்ந்து சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, காஞ்சிபுரம் கலெக்டர், கனிமவளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனைவரையும் ஒன்றுதிரட்டி குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு; மாம்பாக்கம் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Sriperumbudur ,Mambakkam Kalquari ,Mambakkam ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்