×

ஆலத்தூர் அருகே திம்மூர் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

பாடாலூர் ஜூன்17: ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோயிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆவனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று மாலை திம்மூர் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி விழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. தீ மிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று மதியம் தீ சட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து கங்கனம் கட்டுதல், தாலி கூரை படைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கஞ்சமலையார், காத்தாயி, பூவாயி, முடியழகி, விநாயகர் ஆகிய சாமிகள் அக்னி குண்டத்தை சுற்றி வந்தனர். அதையடுத்து வீர வேல் ஏந்தியும், அக்னி கரகம், பூப்பந்து கரகம் சுமந்தும் தீக்குழியில் இறங்கினர். இதன் பின்னர் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும்வகையில் தீ மிதித்தனர். பெண் பக்தர்கள் பலர் கைகளில் குழந்தைகளை ஏந்தி வந்து தீ மிதித்தனர். இரவு மாவிளக்கு பூஜை, பொங்கல் படையலிட்டு சாமியை பக்தர்கள் வழிபட்டனர்.

விழாவில் திம்மூர், சில்லக்குடி, கொளத்தூர், கூடலூர், கூத்தூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். தீ மிதி திருவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை திம்மூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகக் குழுவினர், குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் சில்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் பாரம்பரிய கலைகளான சிலம்பம், ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் வாள், தீபந்தம், வாள் வீச்சு ஆகியவற்றை ஆடி அசத்தினார். அவர்கள் தனது கைகளிலும் சிலம்பத்தை பிடித்து லாவகமாக சுழற்றியபோது, அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அனைவரையும் வியப்பில் ஆழ்ந்தனர். தீ மிதி திருவிழாவில் செய்த இந்த சாகசங்கள் அனைத்தும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

The post ஆலத்தூர் அருகே திம்மூர் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Fire Midi Festival ,Thimmoor Pachchayamman Temple ,Alathur ,Pachhayamman Temple ,Thimmoor ,Alathur Thaluka ,Fire Pedi Festival ,Aalathur ,
× RELATED பைக் மீது டிப்பர் லாரி மோதல்: ஒருவர் பலி