×

ராணுவ வீரரருடன் செல்போனில் பேசிய உறவினர் கைது சதித்திட்டம் தீட்டியதாக நடவடிக்கை மனைவியை தாக்கியதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில்

கண்ணமங்கலம், ஜீன் 16: திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராணுவ வீரருடன் செல்போனில் பேசிய உறவினரை நேற்று சந்தவாசல் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(41). இவர் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருந்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன் படவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் மனைவி கீர்த்தி (28) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் கடையை காலி செய்வது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கீர்த்திக்கு ஆதரவாக கீர்த்தியின் அண்ணன்கள் உதயா, ஜீவா ஆகியோர் ராமுவை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ராமுவுக்கு ஆதரவாக ராமு, அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் கீர்த்தியை தாக்கி கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவ வீரர் பிரபாகரன் தனது மனைவியை அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள அவரது உறவினர் வினோத் என்பவருடன் பேசிய ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் தாக்குதல் தொடர்பாக மிகைப்படுத்தி கூறும்படியும், என் வீடியோவை பார்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது, போராட்டம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் என்னை தொடர்பு கொண்டனர். இனி அந்த கடையை அவர்கள் திரும்ப கொடுத்தாலும் நமக்கு வேண்டாம், நமக்கு மானம்தான் முக்கியம் உள்ளிட்ட தகவல்களை பேசியுள்ளார். இதனை தொடர்ந்து ராணுவ வீரருடன் செல்போனில் பேசிய வினோத் (24) என்பவரை சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக சந்தவாசல் போலீசார் கைது செய்து, போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ராணுவ வீரரருடன் செல்போனில் பேசிய உறவினர் கைது சதித்திட்டம் தீட்டியதாக நடவடிக்கை மனைவியை தாக்கியதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Patavedu Renukampal ,Thiruvannamalai district ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!