×

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அங்குள்ள குன்றின் மீது அமைந்திருக்கும் முருகன் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமை தாங்கினார். கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் முன்னிலை வகித்தார். அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதி கிராம மக்கள் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தில் குழிதோண்டி மா, பலா, கொய்யா, அத்தி, தேக்கு, வேங்கை உள்ளிட்ட 250 மரக்கன்றுகள் நட்டனர். நடப்பட்ட மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பராமரிக்கும் பணியில் அப்பகுதி மக்கள் தினமும் ஈடுபட உள்ளனர். இதில், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் வீரராகவன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மல்லிகா மணி, ஊராட்சி செயலர் ஏழுமலை, வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Murugan ,Hindu Religious Charities Department ,Kandigai ,Panchayat ,Achirupakkam ,Union ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா