×

சுற்றுலாவுக்கு சென்று, திரும்பி வர டிக்கெட் போடாததால் சிங்கப்பூரில் தவித்த சென்னைவாசிகள் 19 பேர் சென்னைக்கு திரும்புகின்றனர்: உதவி கமிஷனர் அதிரடி நடவடிக்கை

பெரம்பூர்: சுற்றுலா சென்ற 19 பேருக்கு திரும்பி வர டிக்கெட் போடாததால் சிங்கப்பூரில் தவித்து வரும் சென்னைவாசிகள், உதவி கமிஷனரின் நடவடிக்கையால் இன்று சென்னைக்கு திரும்புகின்றனர். சென்னை பெரவள்ளூர் எஸ்ஆர்பி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் (69). இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7 நாட்களுக்கு முன், இவரிடம் கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சென்னை வாசிகள் 22 பேர் சிங்கப்பூர் சென்று வர முன்பதிவு செய்துள்ளனர்.

இதில், செங்குட்டுவன் 22 நபர்களுக்கு சிங்கப்பூர் செல்வதற்கான டிக்கெட் எடுத்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு அவர்களை அனுப்பி வைத்தார். மேலும், 22 பேரும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வருவதற்காக நேற்று காலை 11 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களில் 3 நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் உறுதி செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்து பார்த்தபோது மற்ற 19 நபர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் ட்ராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் செங்குட்டுவனை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு செங்குட்டுவன் கொளத்தூர் எஸ்ஆர்பி காலனி மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியிடம் ரிட்டன் டிக்கெட் புக் செய்ய சொல்லி ₹3 லட்சத்து 41 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்யவில்லை என்ற விஷயம் தெரிய வந்தது.

இதனையடுத்து செங்குட்டுவன் கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேலை சந்தித்து புகார் அளித்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காணும் படி உதவி கமிஷனர் சிவகுமாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து செங்குட்டுவனை அழைத்து விசாரணை நடத்திய உதவி கமிஷனர் சிவகுமார் முதலில் அங்குள்ள பயணிகள் வந்து சேர டிக்கெட் போட்டு தாருங்கள், அதன் பிறகு குறிப்பிட்ட அந்த டிராவல்ஸ் ஏஜென்சியிடமிருந்து உங்களது பணத்தை மீட்டுத் தருகிறேன் என உறுதி அளித்தார்.

இதனையடுத்து அங்கிருந்த மற்ற நபர்களுக்கு டிக்கெட் போடும் வேலையை செங்குட்டுவன் செய்தார். அதற்குள் அங்கு இருந்த நான்கு நபர்கள் தனியாக டிக்கெட் புக் செய்து சென்னை கிளம்பி விட்டனர். மீதமுள்ள 15 நபர்களுக்கும் செங்குட்டுவன் இன்று வருவதற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்தார். இந்த தகவல் சிங்கப்பூரில் உள்ள 15 பேருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். செங்குட்டுவன் கொடுத்தபுகார் குறித்து டிக்கெட் புக் செய்யாமல் இருந்த டிராவல்ஸ் ஏஜென்சியிடம் தொடர்ந்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுற்றுலாவுக்கு சென்று, திரும்பி வர டிக்கெட் போடாததால் சிங்கப்பூரில் தவித்த சென்னைவாசிகள் 19 பேர் சென்னைக்கு திரும்புகின்றனர்: உதவி கமிஷனர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singapore ,Perambur ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...