×

வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியில் ₹34 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல்

பெரம்பூர்: வியாசர்பாடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடியுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சொந்த வீடு என்பது நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு எப்போதுமே எட்டாத கனியாக இருக்கிறது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 40 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் மாத வருமானத்தை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் தங்களது வருமானத்தில் பாதியை தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகையாக கொடுத்து வருகின்றனர். இவர்களின் துயர் போக்க அந்தக் காலத்திலேயே பல தலைவர்கள் முயன்றனர்.

சுதந்திரத்திற்கு பின்பு சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசித்து வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு ஜாதி தாக்குதலுக்கு ஆளானார்கள். பல குடிசைகள் 1965ல் தொடங்கி 1970 காலகட்டங்களில் எரிக்கப்பட்டன. அப்போது குடிசை எரிப்பு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக இருந்தன. மேலும் சென்னையில் மழை வெயிலில் குடிசை வீடுகள் சேதமடைந்து மக்கள் சாலை ஓரத்தில் வசிக்கும் அவல நிலையும் ஏற்பட்டது.

அப்போது ஆட்சிக்கு வந்த முதல்வர் அண்ணா, இதைப் பார்த்து இவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என திட்டமிட்டார். ஒவ்வொரு முறையும் புயல், வெள்ளம், குடிசை எரிப்பில் விடுகளை இழந்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் வீடுகளை கட்டிக் கொடுத்தார். அதனை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் கலைஞர் 1971ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து, குடிசைகளை ஒழித்து எல்லோருக்கும் கான்கிரீட் வீடுகள் கொடுக்கும் அற்புதமான திட்டத்தை தொடக்கி வைத்தார்.

தொடக்க காலத்தில் சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இருந்த மீனவர் குடியிருப்பு பகுதிகளில் குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிதாக கான்கிரீட் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சென்னை முழுக்க இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்பு 1984ம் ஆண்டு இந்த திட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் சென்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகளை கொடுப்பது மட்டுமல்லாமல் மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு இவை அனைத்தையும் நல்ல முறையில் பொதுமக்களுக்கு வழங்குவது குடிசை மாற்று வாரியத்தில் பணியாக இருந்து வருகிறது. மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீடுகள் புதுப்பிக்கப்படுவதும், சிதலமடைந்த வீடுகளை இடித்துவிட்டு மீண்டும் அதே பகுதியில் புதிய வீடுகளை கட்டி பயனாளிகளுக்கு வழங்குவதும் குடிசை மாற்று வாரியத்தின் பணியாக இருந்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த குடிசை மாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து இந்த துறையில் புதுப்பொலிவுடன் பல்வேறு திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி கல்யாணபுரம் பகுதியில் 1965ம் ஆண்டு 192 குடியிருப்புகள் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த வீடுகள் மிகவும் சிதலமடைந்து இருந்த காரணத்தினால் இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது.

இதனையடுத்து இங்கிருந்த பயனாளிகள் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு இந்த வீடுகள் இடிக்கப்பட்டு ₹34 கோடி மதிப்பீட்டில் 4 பிளாக்குகள் கொண்ட 5 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடும் 398 சதுர அடி கொண்ட வீடுகளாக இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழு பணிகளும் நிறைவு பெற்று, ஏற்கனவே குடியிருந்த அதே 192 பயனாளிகளும் மீண்டும் புதிய கட்டிடத்தில் குடி அமர்த்தப்படுவார்கள்.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளால் சில மாதங்கள் பணி நிறுத்தப்பட்டதால் சிறிய காலதாமதம் ஏற்பட்டு விட்டதாகவும், தற்போது கூடுதல் பணியாளர்களை வைத்து பணிகள் விரைவாக செய்து வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனாளிகளுக்கு அவர்களது வீடுகள் ஒப்படைக்கப்படும் எனவும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தினம்தோறும் நிர்வாக பொறியாளர் சுடலை முத்துக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 468 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது 192 வீடுகளும் இந்த டிசம்பர் மாதத்திற்குள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் கூறுகையில்:
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பி கல்யாணபுரம் பகுதியில் குடியிருப்புகள் சிதலமடைந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டுச் சென்றபோது அப்பகுதி மக்கள் சிதலமடைந்த இந்த பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு அதே பகுதியில் புதிய குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம் என நான் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை அணுகி அவரிடம் இதுகுறித்து கூறினேன். மேலும் சட்டமன்றத்திலும் பலமுறை இதுபற்றி பேசியுள்ளேன்.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ஆய்வு செய்து பொதுமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி, பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்ட உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் தற்போது குடியிருப்புகள் கட்டப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

The post வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியில் ₹34 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi B Kalyanapuram ,Urban Habitat Development Board ,Perambur ,Vyasarpadi ,Vyasarpadi B ,Kalyanapuram ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824...