×

தேர்தல் தோல்வியை திசை திருப்பவே பொதுசிவில் சட்ட கருத்து கேட்பு: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களை பிரிக்கவே பொது சிவில் சட்டம் பற்றி கருத்து கேட்பு நடத்தப்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து மக்கள், மத அமைப்புகளிடம் கருத்து கேட்கப்படும் என சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:பொது சிவில் சட்டம் தொடர்பாக 21வது சட்ட ஆணையம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், பொது சிவில் சட்டம் தேவையானதும் அல்ல; தற்போதைய நிலையில் விரும்பதக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்வது, தேர்தல் தோல்விகளில் இருந்து திசை திருப்பி,மக்களைப் பிரிக்கும் திட்டமாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி, ‘‘இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை தேவை’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் ,‘‘ பாஜ அறிவித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரித்தாளும் சூழ்ச்சியாகும்’’ என்றார். சமாஜ்வாடி எம்பி ஷபீக்வூர் ரஹ்மான் கூறுகையில்,‘‘ இது நாட்டில் வெறுப்புணர்வை அதிகரிக்க செய்யும்’’ என்றார்.

வாக்கு வங்கி அரசியல்
பாஜ செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனாவாலா கூறுகையில், ‘‘அடிப்படைவாத அழுத்தங்களும், வாக்கு வங்கி அரசியலாலும் காங்கிரஸ் இதை எதிர்க்கிறது’’ என்றார்.

The post தேர்தல் தோல்வியை திசை திருப்பவே பொதுசிவில் சட்ட கருத்து கேட்பு: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்