×

ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா; 313 மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் சுபலட்சுமி, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, தனி வட்டாட்சியர் லதா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முரளி, மண்டல துணை வட்டாட்சியர்கள் டில்லிராணி, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அபிராமி குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.  பின்னர் மாலை நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, 6ம் தேதி முதல் இதுவரை பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் என மொத்தம் 648 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் 313 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 335 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி 15 நாட்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், வட்டத்தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் பிரகாசம், பொருளாளர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தலைமை எழுத்தர் ஹேமாகுமார் நன்றி கூறினர்.

* 186 மனுக்களுக்கு ஆணை படிவம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கடந்த 6ம்தேதி முதல் துவங்கிய 15ம்தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து 959 மனுக்கள் பெறப்பட்டது. அந்த வகையில், கும்மிடிப்பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 1432ம்பசலி வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி நிகழ்ச்சி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன், தனி வட்டாட்சியர் கார்த்திகேயன், சார் கலெக்டர் நேர்முக உதவியாளர் சுரேஷ், துணை வட்டாட்சியர் ரதி, வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் பங்கேற்றார்.

இந்த ஜமாபந்தியில் முதல் நாளில் இருந்து எகுமதுரை, சுண்ணாம்பு குளம், மாதர்பாக்கம், பூதூர், தர்க்காஸ்கண்டிகை, நேமலூர், சிறுவாடா, மாதர்பாக்கம், மாநெல்லூர், செதில்பாக்கம், போந்தவாக்கம், பல்லவாடா, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடி புத்தூர், புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, அயநெல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து வருவாய் துறை, வேளாண் துறை, மின்வாரியத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு வகையான துறை அதிகாரிகள் அமர்ந்த நிலையில், மேற்கண்ட மனுக்களை தொடர் விசாரணை செய்து, அந்த மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டது, அதில் பட்டா மாற்றம் 383 மனுக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 129 மனுக்கள், குடும்ப அட்டை, கிராம நத்தம் பட்டா உள்ளிட்ட 959 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 186 மனுக்களுக்கு, உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியை வருவாய் துறை அதிகாரிகள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

The post ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா; 313 மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jamabandhi closing ceremony ,Uthukottai taluk ,Oothukottai ,Jamabandhi ,ceremony ,Oothukottai taluk ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு