×

சவுதி சிறையில் வாடும் இந்தியர் விசாரணைக்கு ஒத்துழைக்காவிடில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை: கர்நாடக ஐகோர்ட் எச்சரிக்கை

பெங்களூரு: வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் பேஸ்புக் செயலாக்கம் இந்தியாவில் தடை செய்யப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மங்களூருவை சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர் சவுதியில் 25 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இவர் இந்திய அரசு கொண்டுவந்த சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்துக்கு ஆதரவாக தனது முகநூலில் பதிவு செய்தார்.இது தொடர்பாக அவருக்கு மிரட்டல் வந்ததால் உடனே அதை நீக்கிவிட்டார். பின்னர் தனது முகநூல் கணக்கையும் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கிய விஷமிகள் சவுதி அரசர் குறித்தும் இஸ்லாம் குறித்தும் அவதூறு பரப்பினர். இது தொடர்பாக சவுதியில் கைது செய்யப்பட்ட சைலேஷூக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி கவிதா மங்களூரு போலீஸ் ஆணையரிடம் 2021ம் ஆண்டு புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கர்நாடக உயர்நீதிமன்றத்தை கவிதா அணுகினார். மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேஸ்புக் சார்பில் ஆஜரான வக்கீல், எங்கு இந்த சம்பவம் நடந்தது என்று துல்லியமான தகவல் எங்களிடம் இல்லை என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித் , ‘பேஸ்புக் நிறுவனம் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராவிட்டால் உங்கள் செயல்பாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டியதிருக்கும்’ என எச்சரித்தார். உடனே, பேஸ்புக் நிறுவன வழக்கறிஞர், பதிலளிக்க நீதிபதியிடம் ஒரு வார கால அவகாசம் கேட்டார். இதையடுத்து ஜூன் 22ம் தேதி பேஸ்புக் நிறுவனம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post சவுதி சிறையில் வாடும் இந்தியர் விசாரணைக்கு ஒத்துழைக்காவிடில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை: கர்நாடக ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Facebook ,India ,Saudi ,Karnataka iCourt ,Bengaluru ,Karnataka High Court ,Mangaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட...