×

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் சொல்கிறார்கள்

பாட்னா: நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்து வருகிறார். வருகிற 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்:
அனைத்து திட்டப் பணிகளையும் அதிகாரிகள் விரைவில் முடிக்க வேண்டும். ​​மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை. அடுத்தாண்டு தான் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த ஆண்டு இறுதியில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்’ என்றார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறுகையில்: பீகார் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் வந்து சென்ற பிறகு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இதுநடக்குமா என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் ஆளும் பா.ஜ நினைத்தால் எல்லாம் சாத்தியம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் நலத்திட்டங்களை செய்ய முடியாது. எனவே அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றார்.

நாட்டின் மன்னராகி விடுவார் மோடி: ஆம் ஆத்மி
2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து போராடவில்லை என்றால், அடுத்த முறை நாட்டில் தேர்தல் வராமல் போகலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ், ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2024 தேர்தலில் போராடவில்லை என்றால், அதன் பின்னர் நாட்டில் தேர்தலே நடக்காமல் போகலாம் என்பதுதான் இப்போது பெரிய பிரச்னை.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை பார்க்கும் போது, 2024ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், அரசியல் சட்டத்தை மாற்றி அறிவிப்பார். அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த நாட்டின் ராஜாவாக இருப்பார். எண்ணற்ற மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த நாட்டின் சுதந்திரம் பறிக்கப்படும்’ என்றார்.

The post நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் சொல்கிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Nitish Kumar ,Tejashwi Yadav ,Patna ,Bihar ,Chief Minister ,Deputy Chief Minister ,Tejaswi Yadav ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...