×

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஒன்றிய, மாநில அரசின் 100% இடங்களுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் “மனநல ஆலோசனை” வழங்கும் நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் 24 மணி நேர சேவை மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களை தவிர்பதற்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் 40 மன நல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர், அதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்களின் விவரங்கள் நீட் தேர்வு நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன் அந்த மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இது மட்டும் அல்லாமல், நீட் தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பிரபஞ்சன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன், கௌஸ்தவ் பௌரி, சூர்யா சித்தார்த், வருண் ஆகிய 4 மாணவர்கள் இடம் பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தமிழ்நாட்டில் கிடைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. நீட் தேர்வு பொதுக்கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடைபெறும். பொது கலந்தாய்வு என்பதற்கு இந்தாண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 15 சதவீதம் கான கலந்தாய்வு நடத்தி முடித்தவுடன்தான் தமிழ்நாடு அரசு மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு இந்தாண்டு ஒரே நேரத்தில் 15 சதவீதம் மற்றும் 85 சதவீதம் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இதற்கான விதிமுறைகள் தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக வழங்கினால், கடந்தாண்டு ஏற்பட்ட காலதாமதத்தையும் தவிர்த்து உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விரைந்து முடிக்கப்படும். மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் தேர்வுக் குழு செயலாளரிடம் அடுத்த வாரமே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கும் பணியினை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்களிடம் இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம்.

நீட் தேர்வு விலக்கு பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசு தொடர்ந்து விளக்கம் கேட்டு வருகிறது. அதற்கு நம் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 450 இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களும், அரசு புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் 50 பல் மருத்துவ இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 50 இளங்கலை மருத்துவ இடங்கள் என மொத்தம் 500 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று 25 அறுவை சிகிச்சை நடைபெற்றது. இன்று 27 அறுவை சிகிச்சை நடைபெற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு காலதாமதம் ஒன்றிய, மாநில அரசின் 100% இடங்களுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union ,State Government ,Minister ,M.Subramanian ,Chennai ,104 Medical Assistance and Information Center ,Thenampet TMS Complex ,NEET ,
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...