×

ஒன்றாத அரசு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று இலவச திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 11ம் தேதி முதல் அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட 4 நாட்களில் ஒரு கோடிக்கும் மேலான பெண்கள் அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் தென்கனராவில் அரசு பஸ் செல்லாத கிராமங்களில் தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பழங்குடியின பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்து அமல்படுத்திய திட்டம் பெற்ற மாபெரும் வெற்றி அண்டை மாநிலங்களிலும் தற்போது புகழ் பெற்று வருகிறது. கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தேர்தல் அறிக்கையில் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி கட்சி வேறுபாடின்றி அனைத்து மாநிலங்களும் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை கொண்டாடி வருகின்றார்கள் என்றால் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

கர்நாடகாவில் பிபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. இதை முடக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்துவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் உணவுக்கழகம் சார்பில் பல்வேறு உணவுப்பொருள் குடோன்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கி வந்தது.

இதை மாநில அரசு ஒரு குவிண்டால் அரிசியை ரூ.3400 கொடுத்து வாங்கி தங்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது மக்களுக்காக இலவசங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு அரிசி விற்பனையை நிறுத்தியுள்ளது. இதனால் ஜூலை 1ம் தேதி முதல் கர்நாடக மாநில அரசு அமல்படுத்த திட்டமிட்டிருந்த 10 கிலோ இலவச அரிசி திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அம்மாநில அரசு தெலங்கானா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் அரிசி கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜ அரசு அல்லாத மாநிலங்களில் நலத்திட்டங்களை முடக்கி அந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜ அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு அதன் குரல்வளையை நெரித்து வருகிறது. அதுபற்றி பாஜவினர் பேசுவதே கிடையாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாஜ ஆட்சி இல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஒன்றாத அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது.

The post ஒன்றாத அரசு appeared first on Dinakaran.

Tags : CM ,Sitaramaia ,Congress ,Karnataka ,
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!