×

நாஞ்சில் நாட்டின் நல்விருந்து

நாஞ்சில் நாடு என்றால் பலருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது நாஞ்சில் நாட்டு உணவுமுறைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை செட்டிநாடு, கொங்குநாடு உணவுகள் எந்த அளவுக்கு சிறந்ததோ, அதே அளவிற்கு நாஞ்சில் நாட்டு உணவுகளும் சிறந்ததுதான். நாஞ்சில் நாடு என்றாலே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரை அடங்கும்.

பொதுவாகவே இது கடலோர மாவட்டமாக இருப்பதால் கடல் மீன்களில் இருந்து செய்யப்படும் பல வகையான ரெசிப்பிகளும் நாஞ்சில் நாட்டு உணவு முறையில் அடங்கும். நாஞ்சில் பகுதிகளில் பெரும்பாலும் மீன் குழம்பு மிகவும் பிரபலம். சொல்லப்போனால், மீனில் செய்யப்படும் அனைத்து சமையல் குறிப்புகளும் இங்கு மிகவும் சுவையாக இருக்கும். அதேபோல, கேரளாவுக்கு அருகில் உள்ள ஊர் என்பதால் மிளகு, தானியம், சிவப்பு மிளகாய் மற்றும் சோம்பு ஆகியவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நாஞ்சில் நாடு, உணவுப் பழக்கவழக்கங்களில் மட்டும் சிறப்பு வாய்ந்தது இல்லை.

அந்தப்பகுதி தேங்காய்க்கும் அதிக அளவில் மவுசு இருக்கிறது. அதனாலயே, நாஞ்சில் விருந்தில் இடம்பெறும் அனைத்து வகையான உணவிலும் தேங்காயை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். அவர்கள் சமையலுக்கு கூட தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். வாழைப்பழ சிப்ஸ் அந்தப்பகுதியின் தனி அடையாளம். அந்த சிப்ஸைக் கூட தேங்காய் எண்ணெயில் தான் செய்வார்கள். அதுபோக, அந்தப்பகுதியின் அக்மார்க் உணவு என்றால் தீயல், உளுந்துச்சோறு, பரோட்டாக்கள் மற்றும் முட்டை அவியல்தான். நாஞ்சில் நாட்டுக் கல்யாண விருந்து தனித்துவமானது.

தலைவாழை இலையில் தொடங்கி முதலில் இடது ஓரத்தில் உப்பு வைத்துவிட்டு நகர, அதன் பின்னால் வாழைக்காய் துவட்டல், மாங்காய் பச்சடி, இஞ்சி பச்சடி, தயிர் பச்சடி, அவியல், சேனை எரிசேரி, நார்த்தங்காய் பச்சடி, மசாலாக் கறி என ஒன்பது கறி, 11 கறி என நீளும் பட்டியல். இது போதாது என சிப்ஸ், வாழைப்பழமும் வைப்பார்கள். அதேபோல, அவியலுக்கு பேர்போன ஊர் என்றால் அது நாஞ்சில் நாடு தான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவியல் இருந்தாலும் நாஞ்சில் நாட்டின் அவியல் பிரத்யேகமானது. இந்த அவியலில் முருங்கைக்காய், வாழைக்காய், வழுதலங்காய், தேங்காய், கேரட் என பல வித காய்கறிகளும் போடுவார்கள். தமிழகத்தின் மற்ற எந்தப் பகுதியையும் விட குமரி மாவட்டத்தில் மட்டும் அவியல் மரக்கறி எனத் தனியாகக் கிடைக்கும். விருந்துக்கும் சரி, உபசரிப்புக்கும் சரி நாஞ்சில் நாடு தனித்தன்மை வாய்ந்தது.

The post நாஞ்சில் நாட்டின் நல்விருந்து appeared first on Dinakaran.

Tags : Nanjil ,Nadu ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...