×

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது: விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு..!!

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து 3வது முறையாக முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பயிர்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 90 கோடி மதிப்பீட்டில் 4773 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி தாயை வரவேற்கும் விதமாக முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீரை திருச்சி மாவட்ட பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மலர் தூவியும், நெல் மணிகளை தூவியும் வரவேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். முக்கொம்புவுக்கு வரும் நீர்வரத்து 1,900 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கல்லணை தந்த கரிகாலன் சோழன் புகழ் வாழ்க என்றும் காவிரித்தாய் வாழ்க காவிரி தாயே வருக என்று கோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர். காவிரி நீர் இன்று இரவு கல்லணையை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது: விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Trichy Mukkombu ,Trichy ,Mukkombu ,
× RELATED மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்...