×

கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க விண்ணப்பம் வரவேற்பு

சேலம், ஜூன் 15: கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் சேலம் மாவட்ட கலை மன்றத்தின் மூலம் கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து கலெக்டர் கார்மேகம் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2022-2024ம் ஆண்டுக்கான கலை விருதுகள், கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் சேலம் மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதும். 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கக் கூடாது. தகுதி வாய்ந்த கலைஞர்கள் மேற்கண்ட விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரி சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (3) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் தொலைபேசி எண்ணுடன் உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், ஆவின் பால்பண்னை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District Art Forum ,Department of Arts and Culture ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்