இந்தூர்: நாடு முழுவதும் 4,909 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.8100 கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச மாநில வணிக வரித்துறை ஆணையர் தெரிவித்தார்.
இது குறித்து மபி வணிகவரி ஆணையர் லோகேஷ் குமார் ஜாதவ் கூறுகையில்:
இந்தூரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் மாநில இ- வே பில்கள் குறித்து பல நாட்கள் ஆய்வு நடத்தியதில் மிக பெரிய இந்த மோசடி குறித்து தகவல் கிடைத்தது. அதன்பின் தீவிர ஆய்வு நடத்திய போது, நாடு முழுவதும் 4909 போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 1,888, உபியில் 831, அரியானாவில் 474, தமிழ்நாட்டில் 210, மகாராஷ்டிராவில் 201,தெலங்கானாவில் 167, மபியில் 139 போலி நிறுவனங்கள் உள்ளன.
இந்த 4909 நிறுவனங்களின் வர்த்தகம்(டேர்ன்ஓவர்) ரூ.29 ஆயிரம் கோடி என்று 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளுக்கான தாக்கல் செய்த ஜிஎஸ்டி ரிட்டர்ன்ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ரூ.8103 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட இதர மாநிலங்களின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.
The post போலி நிறுவனங்கள் மூலம் ₹8100 கோடி வரி ஏய்ப்பு: மபி அதிகாரி அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

