×

சிறுகளத்தூர் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: சிறுகளத்தூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 170 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சிறுகளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 170 பயனாளிகளுக்கு, ரூ.1 கோடியே, 32 லட்சத்து, 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 31.5.2023 முதல் 12.6.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்று திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 80 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 170 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம், 5 நபருக்கு தையல் இயந்திரம், ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வருவாய் துறை மூலம் 30 பேருக்கு அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 35 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் 45 நபர்களுக்கும் குடும்ப அட்டை நகல், மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 2 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் ஒருவருக்கும், பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை 13 நபர்களுக்கும், தொழில்துறை மூலம் தொழில் கடன் 3 நபர்களுக்கும், வேளாண்மை துறை மூலம் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், பவர் டில்லர் இயந்திரம் ஒருவருக்கும், தோட்ட கலைத்துறை மூலம் நாற்றுகள் 5 நபர்களுக்கும், கூட்டுறவு துறை மூலம் மகளிர்சுய உதவிக்குழு கடன் 4 நபர்களுக்கும், தாட்கோ துறையின் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை 12 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த மக்கள் தொடர்பு முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பள்ளி துவக்க நாளை முன்னிட்டு, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் (இ) படப்பை, சிறுகளத்தூர் ஊராட்சி, கெலடிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சந்தித்து உரையாடி, மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார். பின்பு, பள்ளியில் உள்ள சத்துணவு மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து சிறுகளத்தூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுடன், கலெக்டர் உரையாடி, இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், காவனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு, வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் உணவு பொருட்கள் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறுகளத்தூர் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sirukalathur Public Relations ,Camp ,Kanchipuram ,Sirukalathur ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...