×

புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: மதுராந்தகத்தில் பரபரப்பு

மதுராந்தகம்: புதிய குவாரி அமைக்க நடந்து வரும் பணிகளை உடனே நிறுத்தக்கோரி, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் சரவம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றி பலநூறு ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இக்கிராமத்தின் அருகே தனியார் கல்குவாரி இயங்கி வந்தது.

இதனால், இக்கிராமத்தை சுற்றி நிலத்தடி நீர் குறைந்ததால் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் சரவம்பாக்கம் மற்றும் அருகில் உள்ள கிராமமான பெருவேலி ஆகிய இரண்டு ஊர் கிராம மக்களுக்கும் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கொட்டிவாக்கம் – கொளத்தூர் சந்திப்பு பகுதியில் தனியார் நிறுவனம் கடந்த சில நாட்களாக புதிய கல்குவாரி அமைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த புதிய குவாரியால் சரவம்பாக்கம் மற்றும் பெருவேலி கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் சூழல் உள்ளது.

இந்த புதிய குவாரி அனுமதியயை ரத்துசெய்ய கோரி கிராமமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், அதிருப்தியில் இருந்த இரண்டு ஊர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில் சிறப்பு அலுவலர் வெங்கடேசனை நேரில் சந்தித்து புதிய குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஜமாபந்தி அலுவலர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: மதுராந்தகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhurandakam ,District Collector ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்