×

மதிமுகவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு: வைகோ பேட்டி

சென்னை: மதிமுகவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 1,556 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று வைகோ கூறினார். மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில், 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து, வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதிமுகவின் அமைப்பு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 1,556 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் விதிமுறைகளை அமலாக்கத்துறை பின்பற்றவில்லை. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகத்துக்குள் அனுமதி இல்லாமல் சென்று சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இல்லை’’ என்றார்.

தீர்மானங்கள்: மதிமுக பொதுச் செயலாளராக 5வது முறையாக பொறுப்பேற்று கட்சியை வழி நடத்துகிற வைகோவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற காலத்திலிருந்து கவர்னர் அலுவலகம் ராஜ்பவனில் இருந்து போட்டி அரசு நடத்திக் கொண்டிருக்கிறார். மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்துத்துவ கோட்பாட்டை திணிக்கும் வகையிலும் பகிரங்கமாக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் மக்களிடத்தில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

The post மதிமுகவில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madhimuk ,Vaiko ,Chennai ,MDMK General Committee… ,MDMK ,Dinakaran ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்