×

மாற்று கருத்து தர வந்த இஎஸ்ஐ மருத்துவர்களும் ஓமந்தூரார் அரசு மருத்துவர்களின் கருத்துகள் உண்மை என சான்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மருத்துவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து பெறவேண்டும் என அழைத்துவரப்பட்ட கலைஞர் நகர் இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர்களும், ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்களின் கருத்துகள் உண்மை. மேலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று சான்றிதழ் அளித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்பி பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவின் திட்டத்தை அமலாக்கத்துறை செயல்படுத்த முயற்சித்துள்ளது. முழு ஒத்துழைப்பு தருவேன் என்ற பிறகும் அடிப்படை உதவிகள் கூட வழங்காமல் 18 மணி நேரத்துக்கு பிறகும் டார்ச்சர் செய்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரே இடத்தில் அமர வைத்து துன்புறுத்தியுள்ளது. வரும் 23ம் தேதி கூட பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதனால் பாஜ பதற்றத்தில் அமலாக்கத்துறை மூலம் நேரடியாக மிரட்டும் வேலையை செய்கிறது.

அரவகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை தோற்றுவிட்டார். தனது தோல்விக்கு காரணம் செந்தில் பாலாஜி என எண்ணிக்கொண்டு அவரை பழிவாங்க சுற்றிக்கொண்டு இருக்கிறார். செந்தில்பாலாஜி தார்மீக அடிப்படையில் அவரே பதவிவிலக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அரசின் டெண்டர்கள் ரூ.4000 கோடியை தனது குடும்பத்திற்கே ஒதுக்கியவர்கள். செந்தில்பாலாஜியை அதிகாலையில் அழைத்து செல்லும் போதும், மருத்துவமனையில் அவர் துடிதுடித்துக்கொண்டிருந்தார். மனிதநேயம், மனிதாபிமானமும் இல்லாமல் அவருக்கு எந்த வித உதவிகளையும் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஓமந்தூரார் மருத்துவர்கள் தேவையான மருத்துவ சேவைகளை செய்தனர்.

இதய மருத்துவர்கள் ஆய்வு செய்து அவருக்கு பெரிய அளவில் 3 அடைப்பு உள்ளது. எனவே ஆஞ்சியோ செய்ய வேண்டும். செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிபதியை மருத்துவமனைக்கு அழைத்தனர்.
இதற்கு இம்மருத்துவமனையின் மருத்துவர்களின் கருத்திற்கு மாற்று கருத்து பெறவேண்டும் என்பதற்காக கலைஞர் நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து ஒன்றிய அரசாங்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவரை பார்த்த மருத்துவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்களின் கருத்துகள் உண்மை. மேலும் ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற சான்றிதழ் அளித்துள்ளனர் என்றார்.

The post மாற்று கருத்து தர வந்த இஎஸ்ஐ மருத்துவர்களும் ஓமந்தூரார் அரசு மருத்துவர்களின் கருத்துகள் உண்மை என சான்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ESI ,Omanturar government ,Minister ,M. Subramanian ,Chennai ,Kalayan Nagar ESI Hospital ,Omanturar Hospital ,
× RELATED சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி