×

கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே உள்ள மொச்சிகுளம் கிராமத்தில், நாயக்கர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள மொச்சிகுளத்தில் பழமையான சிலை இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ராஜலிங்கபாண்டி என்ற வாலிபர், மதுரை ராகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் வரலாற்று துறை மாணவர்கள் தர்மராஜா, முரளிதரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து வரலாற்றுதுறை உதவி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், நடராஜன், பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மொச்சிகுளம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அங்கு சிலை என கிராம மக்கள் தெரிவித்தது ஒரு போர் வீரனின் நடுகல் சிற்பம். நாயக்கர் காலத்து நடுகல் என்பதும் தெரிய வந்தது.

இந்த நடுகல் சிற்பமானது மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் தனது வலது கையில் வாளினை உயர்த்தி பிடித்தும், மற்றொரு கையினை ஹடிகஸ்தமாக தொடையில் வைத்தபடியும் இடதுதோள் புஜத்தில் கேடயத்துடன் காட்சி தருகிறார். தலைப்பகுதி இடப்பக்கம் சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளையும், மார்பில் ஆபரணங்களும், வீரசங்கிலியும் அணிந்தபடி இடையில் இடைக்கச்சை அணிந்தபடி சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீரனுக்கு இடது பக்கம் இவரின் மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. பெண் சிற்பம் தலைப்பகுதி இடப்பக்கம் சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளில் அணிகலன்களும், வலது கையில் மலர் சென்டினையும், இடது கையில் ஏதோ ஒரு முடிப்பையும் பிடித்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், போரில் ஈடுபட்டு வீரமரணம் அல்லது வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பது மரபு. அந்த வகையில் நாயக்கர் காலத்தில் ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பது தெரியவந்தது. தனது கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் கணவன் எரியும் தீயில் தன் உயிரையும் மாய்த்து கொண்டதால் இவர்களுக்கு நடுகல் எடுத்துள்ளனர். கிராமமக்கள் இதனை காளி கோயில் என வழிபட்டு வருகின்றனர் எனவும் தொல்லியல் கள ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

The post கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallikudi ,Thirumangalam ,Mochikulam ,Kallikkudi ,Madurai district ,Nadu ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...