×

நீட் தேர்வில் முதலிடம் பிடித்து விழுப்புரம் மாணவன் சாதனை; எனது மகனின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது: பெற்றோர் மகிழ்ச்சி

மேல்மலையனூர்: இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடந்தது. 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை விண்ணப்பித்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில் 78 ஆயிரத்து 693 பேர் இந்த ஆண்டு நடந்த இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போரா வருன் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த மாணவர் பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர்.

இதனைதொடர்ந்து, மாணவர் பிரபஞ்சன் சென்னை வேலம்மாள் வித்யாலயம் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவரது தந்தை ஜெகதீஷ் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்றுப்பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலா, நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதப்பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவன் பிரபஞ்சனின் பெற்றோர் தங்கள் மகள் முதலிடம் பெற்றுள்ளதை கொண்டாடி வரும் நிலையில் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இருவரும் தங்கள் மகனின் மருத்துவ கனவு நனவாகி விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என தங்கள் மகன் நினைத்ததால் அதிகம் ஊக்கம் அளித்ததன் காரணமாக இன்று தேசிய அளவில் முதலிடம் பெற வாய்ப்பாக அமைந்தது என பெற்றோர் பெருமிதம் தெரிவித்தனர்.

The post நீட் தேர்வில் முதலிடம் பிடித்து விழுப்புரம் மாணவன் சாதனை; எனது மகனின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது: பெற்றோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Malayalayanur ,India ,Vilapuram ,Dinakaran ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!