×

குருவாயூர் கோயில் அருகே பரபரப்பு; லாட்ஜில் 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்று கை நரம்பை துண்டித்து தந்தை தற்கொலை முயற்சி: 2வது மனைவி இறந்ததால் விபரீத முடிவு

பாலக்காடு: குருவாயூர் கோயில் அருகே தனியார் லாட்ஜில் 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 2வது மனைவி இறந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (58). சரக்கு லாரி டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று 2வதாக அஜிதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சிவானந்தா(12), தேவானந்தா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இவர்கள் குருவாயூர் அருகே சூல்புரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்தனர். இந்தநிலையில் அஜிதா கடந்த மே 27 ம்தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மனைவி இறந்தநாள் முதல் யாருடனும் சரியாக பேசாமல் இருந்த சந்திரசேகரன் கடந்த 12ம் தேதி 2 மகள்களுடன் வந்து குருவாயூர் கோயில் அருகே தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று மதியம் அறையை காலிசெய்ய சொல்வதற்காக லாட்ஜ் ஊழியர்கள் சென்று கதவைத்தட்டி அழைத்தனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசாரை வரவழைத்து அவர்கள் தங்கிய அறை கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.

அப்போது, சந்திரசேகரன் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து கை நரம்பை அறுத்துக் கொண்டது தெரியவந்தது. இதில் சிவானந்தா சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். அருகில் கைநரம்பு துண்டிக்கப்பட்டு மயங்கி கிடந்த சந்திரசேகரனை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வாயில் நுரை தள்ளியபடி மயக்க நிலையில் இருந்த தேவானந்தாவை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே சந்திரசேகரனின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது கடிதம் சிக்கியது. அதில், ‘‘மனைவி அஜிதா இறந்துவிட்ட நிலையிலும், தேவானந்தா என்ற மகளுக்கு காசநோய் உள்ளதாலும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக, சந்திரசேகரன் எழுதிவைத்துள்ளார். இதுகுறித்து குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குருவாயூர் கோயில் அருகே பரபரப்பு; லாட்ஜில் 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்று கை நரம்பை துண்டித்து தந்தை தற்கொலை முயற்சி: 2வது மனைவி இறந்ததால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Tags : Bustle ,Guruvayur Temple ,Palakkad ,
× RELATED குருவாயூர் கோயில் தேவஸ்தான வளர்ப்பு யானைகள் முகாமில் கேமரா பொருத்தம்