×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1,611 தொடக்கப்பள்ளிகள் திறப்பு

*இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,611 தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அதையொட்டி, மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. ஆனால், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, 7ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இன்று (14ம் தேதி) தொடங்குகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,611 தொடக்கப்பள்ளிகளும் தூய்மைச் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் இன்னும் குறையாததால், வகுப்பறைகளில் காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் அரசு வழங்கும் வண்ண பென்சில், கணிதபெட்டி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பள்ளிகளில் இறைவணக்க கூட்டம் முடிந்ததும், பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வகுப்புக்கு செல்ல ஏற்பாடு செய்யுமாறு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொடக்கப்பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நேரடி மேற்பார்வையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், நளினி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர், பள்ளிகளை இன்று நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1,611 தொடக்கப்பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai district ,Thiruvanamalai ,district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...