×

குறுவை சாகுபடிக்காக கல்லணையில் 16ல் தண்ணீர் திறப்பு-விவசாய பணிகள் மும்முரம்

தஞ்சாவூர் : குறுவை சாகுபடிக்காக கல்லணையில் வரும் 16ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவதால் வயல்களை உழுது நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி 28ம்தேதி அணை மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதால் கடந்த 12ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். அங்கிருந்து 200 கி.மீ. ெதாலைவு பயணித்து வரும் தண்ணீர் 16ம்தேதி தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அன்று காலை மங்கல வாத்தியம் முழங்க, மலர்கள் மற்றும் விதைகளை தூவி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அப்போது கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர், விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனையுடன் தண்ணீர் திறந்து விடப்படும். இதில் முதலில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், இறுதியில் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் வரத்தை பொறுத்து முறை பாசனம் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடப்பாண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என வேளாண் துறை அறிவித்துள்ளது. வயல்களை உழுது நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ₹75 கோடி மதிப்பிலான சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் கூடுதல் நெல் உற்பத்தி செய்யப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குறுவை சாகுபடிக்காக கல்லணையில் 16ல் தண்ணீர் திறப்பு-விவசாய பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,RCR Culture Cemetery 16th ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...