×

கஞ்சா கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் உட்பட ஆந்திரா, ஒடிசாவில் பதுங்கியிருந்த கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது

* ரூ.4 லட்சம் பணம், 3 செல்போன்கள், கார் பறிமுதல்

* ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படைக்கு பாராட்டு

மதுரை : ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை மதுரை மாநகர தனிப்படை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் பணம், 3 செல்போன்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து கஞ்சாவை தமிழகத்திற்கு கடத்தி வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் சிலர் விற்று வருகின்றனர். இதனை போலீசார் தீவிர வாகன சோதனை மூலம் தடுத்து வருகின்றனர். கஞ்சாவை தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்து, பதுக்கி வைத்து மொத்த வியாபாரம் செய்பவர்களில் முக்கியமானவர் ஜெயக்குமார் (எ) ஜே.கே (35). இவர் ஏற்கனவே மதுரை கீரைத்துறை போலீசாரால் பிடிக்கப்பட்டு 2.09 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவானவர். இவரை பிடிக்க மதுரை மாநகர் போலீசார் திட்டமிட்டனர்.

இதன்படி, மதுரை திலகர்திடல் உதவி போலீஸ் கமிஷனர் மகேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் (எஸ்.எஸ்.காலனி), பெத்துராஜ் (கீரைத்துறை), முருகன் (கடும் குற்றப்பிரிவு) மற்றும் காசி (திடீர் நகர்) ஆகியோர் மேற்பார்வையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு மால்கன்கிரி பகுதியில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை (35) கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4 லட்சம் பணம், 3 செல்போன்கள், 3 மோடங்கள், போலி வாகன நம்பர் பிளேட்கள் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து ஜெயக்குமார் கொடுத்த தகவலின்பேரில், கடத்தலுக்கு உதவிய கூட்டாளிகளான ராதா (எ) ராதாகிருஷ்ணன் (32), சிவக்குமார் (எ) வாழைப்பழ சிவக்குமார் (38) மற்றும் ஜோஸ் (எ) மெர்வின் ஜோஸ் (24) ஆகிய 3 பேரையும், ஆந்திர மாநிலம், அனந்தபுரம் அனைக்காபள்ளி என்ற இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவர்கள் அந்தந்த மாநில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை கொண்டு வரப்பட்டனர். உரிய விசாரணைக்குப் பின், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

கைதான ஜெயக்குமார் என்ற ஜேகே மீது தமிழகம் முழுவதும் 7 கஞ்சா வழக்குகள் உட்பட 26 குற்ற வழக்குகள், சிவக்குமார் என்ற வாழைப்பழ சிவக்குமார் மீது 6 கஞ்சா வழக்குகள் உட்பட 13 குற்ற வழக்குகள், ராதாகிருஷ்ணன் மீது 5 கஞ்சா வழக்குகள் உட்பட 6 குற்ற வழக்குகள், ஜோஸ் என்ற மெர்வின் ஜோஸ் மீது ஒரு கஞ்சா வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைதான கஞ்சா வியாபாரிகள் ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அவற்றை தமிழகம் முழுவதும் கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளனர். மேலும், ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கும் கடத்தியுள்ளனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை, கடந்த 6 மாதமாக தனிப்படை போலீசார் கண்காணித்து கைது செய்துள்ளனர். ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு கஞ்சா வியாபாரிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.

The post கஞ்சா கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் உட்பட ஆந்திரா, ஒடிசாவில் பதுங்கியிருந்த கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Odisha ,Madurai ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...