×

மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வீதம் ₹10 லட்சத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது, புரோகிதர்கள் வளையம் அமைத்து விக்ரங்களை குளத்தில் மூழ்கி நிராடியபடி பூஜை செய்தபோது, 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்தில் பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆலந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் அருளானந்தன் தலைமையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கோயில் குளத்தில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர்களான புழுதிவாக்கம் முத்துமுகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியை சேர்ந்த வனேஷ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22) மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊழியராக பணியாற்றிய நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வீதம் ₹10 லட்சம் நிதியுதவியினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், தாசில்தார்கள் துளசிராம், பால் ஆனந்தராஜ், மாமன்ற உறுப்பினர் சாலமோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Muvarasampatu ,Minister ,Thamo Anparasan ,Alandur ,Moovarasampatu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...