×

சென்னை உட்பட 7 நகரங்களில் வெள்ளம் தடுக்க ₹2,500 கோடி நிதி: அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: சென்னை உட்பட 7 நகரங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ. 2,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கள் கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் அமித் ஷா, ’’தீயணைப்பு துறை சேவைகளை மேம்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் ₹5,000 கோடி நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வெள்ள அபாயம் ஏற்படுவதை தடுக்க ₹2,500 கோடி நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.அதே போல், நிலச்சரிவு ஆபத்து ஏற்படும் 17 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ₹825 கோடி நிதி உதவி வழங்க உள்ளது. இதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்,’’ என்று தெரிவித்தார்.

பேரிடர் தணிப்பு நிதி ஒதுக்கீட்டின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு கூட்டத்தில் பேசியதாவது:
மாநில பேரிடர் தணிப்பு நிதியை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் தான் அதற்கான தொகை தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து கிடைக்கப்பெறும் என்ற நிலை இருக்கிறது. இது மாற்றப்பட்டு மாநில அரசு, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையிலேயே மத்திய நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.

ஒரு நிதி ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பேரிடருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 50 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், மாநில அரசின் எழுத்துப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் தேசிய செயற்குழுவின் துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நிபந்தனையை உள்துறை அமைச்சகம் தளர்த்தலாம். தமிழ்நாடு, பல்வேறு பேரிடர்களின் காரணமாக பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதால் மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ஒரு நிதியாண்டில் ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியின் மொத்த ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டுக்கு மேல் செலவிட இந்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திட வேண்டும் என்றார்.

The post சென்னை உட்பட 7 நகரங்களில் வெள்ளம் தடுக்க ₹2,500 கோடி நிதி: அமித் ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amit Shah ,New Delhi ,
× RELATED அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா...