×

நாளை கரையை கடக்கும் நிலையில் குஜராத்தை மிரட்டும் பிபர்ஜாய் புயல்: 21,000 பேர் முகாம்களுக்கு மாற்றம்

அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டம் ஜக்காவ் துறைமுகம் அருகே அதி தீவிர பிபர்ஜாய் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. புயல் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 21,000 மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு பிபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டம் ஜக்காவ் துறைமுகம் அருகே நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயல் போர்பந்தருக்கு தென்மேற்கே 290 கிமீ தொலைவில் நகர்வதாகவும் இது நாளை மாலைக்குள் ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலால் கட்ச், துவராகா மற்றும் ஜாம்நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 125 முதல் 135 கிமீ வரையிலும், சில இடங்களில் 150 கிமீ வரையிலும் சூறாவளி வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி மற்றும் ஜூனாகர் போன்ற பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், கடற்கரையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் 6,500 பேரும் துவாரகாவில் 5,000 பேரும், ராஜ்கோ்டில் 4,000 பேரும், மோர்பியில் 2,000 பேரும், ஜாம் நகரில் 1,500 பேரும், போர்பந்தர் மாவட்டத்தில் 550 பேரும், ஜூனாகர் நகரில் 500 பேரும் என 21,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் படையின் 12 குழுக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கொள்ள தயார்
* புயல் காரணமாக கடலில் சீரற்ற வானிலை நிலவும் நிலையில், துவாரகா கடற்கரையிலிருந்து 40 கிமீ தொலைவில் கடலில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிடங்கில் பணியாற்றி வந்த 50 ஊழியர்கள் நேற்று பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
* புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லியில் ஆய்வுக்கூட்டம் நடத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புயலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக இருப்பதாகவும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக உறுதி அளித்தார்.
* புயல் காரணமாக மும்பை – குஜராத் இடையே 20 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post நாளை கரையை கடக்கும் நிலையில் குஜராத்தை மிரட்டும் பிபர்ஜாய் புயல்: 21,000 பேர் முகாம்களுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Cyclone Bibarjai ,Gujarat ,Ahmedabad ,Cyclone ,Pibarjai ,Jakkau port ,Kutch district ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...