×

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தாலும் ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனை தொடர்ந்து மருத்துவமனையாகவே செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சுயநிதி கல்லூரி மாணவர் சேர்க்கை பகிர்ந்தளிப்பு தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை 17 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 1710 இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வினால் இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போவதாக சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகளால் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்து வருவதால் நீட் தேர்வு முடிவுகள் வரும் வரையில் மாணவர் சேர்க்கைக்காக காத்திருக்க வேண்டாம்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடனே கலந்தாய்வு நடத்த அனுமதிக்கலாம் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரின் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதற்கு இந்த கூட்டம் உதவியாக இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவர்கள் பணிச்சுமையினால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து மிகவும் தவறானது. மருத்துவ துறையில் காலியாக உள்ள 1021 மருத்துவர்களும், 980 மருந்தாளுநர்களும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தற்போது இணைப் பேராசிரியர்கள் 30 பேர், உதவிப் பேராசிரியர்கள் 100 பேர் என 130 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்குநர், இரண்டு உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு புதிதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கிற பணியிடங்களில்தான் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தவறான விவாதமாகும்.

இதுவரை 7 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 500 முதல் 700 படுக்கைகள் வரை புதிதாக திறக்கப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் வாங்கும் பணி, நோயாளிகளின் தேவைக்கேற்ப முடிவுசெய்யப்பட்டு வாங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதற்கு 3 மாதங்கள் வரை ஆகும். மேலும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் கூட அரசு ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து மருத்துவமனையாகவே தான் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தாலும் ஓமந்தூரார் மருத்துவமனை தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Omanturar Hospital ,Kalayanth Centenary Hospital ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Kalayan Centenary Pannoku Hospital ,Omanturar Government Hospital ,Kalayan Centenary Hospital ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி