சென்னை: வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 200 மின்சார இருசக்கர வாகனங்கள், 50 பொலிரோ ஈப்புகள், 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 42 லட்சம் செலவிலான 200 மின்சார இருசக்கர வாகனங்கள், ரூ.4 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலான 50 பொலிரோ ஈப்புகள், வன உயிரின அவசர மீட்பு பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட ரூ.5 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தனிச்சிறப்புடன் வடிவமைக்கப்பட்ட 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இணைந்து தமிழ்நாடு அரசு ரூ.920.52 கோடி செலவில் சிறப்பு திட்டமான காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்களின் ஈடுபாட்டுடன் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் வனவிலங்கு வாழ்விடங்களை மேம்படுத்துவதும் கார்பன் சம நிலையை அடைவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். நடப்பு ஆண்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரூ.104.10 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளன.
வன சுற்றுச்சூழலை பாதுகாத்திட ரூ.2.42 கோடி நிதியில் 200 மின்சார இருசக்கர வாகனங்களை வனத்துறை கொள்முதல் செய்துள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் முன்களப் பணியாளர்கள் தொலைதூர பகுதிகளைப் பார்வையிடவும், ரோந்து செல்லவும் பெரிதும் உதவும். மேலும், வனத்துறையின் கள மேலாண்மை பணிக்காக ரூ.4.63 கோடி நிதியில் 50 பொலிரோ ஈப்புகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், வனப் படையை நவீனமயமாக்குவதற்காக அரசு ரூ.52.83 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ரூ.5.25 கோடி நிதியில் 35 வாகனங்களை வனவிலங்கு பிரிவு கொள்முதல் செய்துள்ளது. இந்த வாகனங்கள் 35 மாவட்டங்களில் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் முன்களப் பணியாளர்களை மனித வனவிலங்கு மோதல் பகுதிகள் மற்றும் காட்டுத்தீ பரவும் இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் விலங்கு மீட்புக்கு உதவும் வகையில் வாகனங்களில் தேடல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களில் புவியிடங்காட்டி மற்றும் ஒலிபெருக்கி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய விலங்குகளை மீட்க இந்த வாகனத்தில் 6 டன் வின்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் பங்கேற்றனர். வன சுற்றுச்சூழலை பாதுகாத்திட ரூ.2.42 கோடி நிதியில் 200 மின்சார இருசக்கர வாகனங்களை வனத்துறை கொள்முதல் செய்துள்ளது.
The post வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 200 மின்சார இருசக்கர வாகனங்கள், 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

