×

ஒன்றிய அரசின் நல் ஆளுமை கிராம ஊராட்சி விருது தேசிய அளவில் முதலிடம் பெற்ற பிச்சானூர் ஊராட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அரசின் நல் ஆளுமை கிராம ஊராட்சியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி தேசிய ஊராட்சிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை பெருமைப்படுத்தும் விதமாக, உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மையப்படுத்தி 9 கருப்பொருட்கள் இனம் காணப்பட்டு, அவற்றில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2022-23ம் ஆண்டில் தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த 27 கிராம ஊராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழ்நாட்டிற்கு நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஜனாதிபதியால் கடந்த ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விருதை சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார், ஆணையர் தாரேஸ் அஹமது, பிச்சானூர் ஊராட்சி மன்ற தலைவர் மருதாசலம், ஊராட்சி செயலர் உமாமகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஒன்றிய அரசின் நல் ஆளுமை கிராம ஊராட்சி விருது தேசிய அளவில் முதலிடம் பெற்ற பிச்சானூர் ஊராட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BC G.K. ,Stalin ,Chennai ,Union Government ,Grama Puradi ,Bichanoor Puradi ,G.K. Stalin ,Union ,Bichanoor Puradam ,B.C. ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...